முதல்வர் விஜய்யால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தமிழக செமிகண்டக்டர் திட்டத்தில், திருச்சியைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், தமிழகத்தின் வளர்ந்து வரும் குறைக்கடத்தி தொழில்துறையில் திருச்சியின் பங்களிப்பு கவனம் பெற்றுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த எனிக்ஸ் (ENIXS) நிறுவனம், குறைக்கடத்தி சில்லுகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்துக்காக இத்துறையில் பணியாற்றுவதாக, தமிழகத்தின் செமிகண்டக்டர் தொழில்துறை நிறுவனங்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.தைவானைச் சேர்ந்த ஃபுல் செயின் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் திருச்சி ஆலை, குறைக்கடத்தி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாயுக்கள் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சிப் தயாரிப்பில் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அதற்குத் தேவையான மூலப் பொருட்கள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பிரிவுகளில் திருச்சியைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பது, மாவட்டத்தில் இத்துறை சார்ந்த தொழில் செயல்பாடுகள் வளர்ந்து வருவதற்கான முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
மின்னணு மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் செமிகண்டக்டர் கொள்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் உள்ள நிறுவனங்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் புதிய முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.